கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி பிறந்த நாள்

கப்பலோட்டிய தமிழர்

வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம், என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

இளமையில், வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியாரிடம் சிவபுராணக்கதைகளையும் பாட்டனாரிடமிருந்து இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கற்றறிந்தார்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.வழக்கறிஞர் எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பலவித திறமைகளை  பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை  மிகவும் உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம்,  எதையும் ஒளிவு மறைவு இல்லாது பேசுதல், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார்.
“பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.
வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. “ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி”யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது “ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி” யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.
ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது “திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார்.
வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ். எஸ். லாவோ” என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.
இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர்.
பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.
ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.இதற்காக பழிவாங்கும் நடவடிக்கை நடைபெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
தியாகி சுப்பிரமணிய சிவா, அவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் அந்த கிராமத் தலைவரின் மகன். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினார்.
வ.உ.சி.கடற்கரையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது பேச்சாற்றலும் தாய் நாட்டுப் பற்றும் வ.உ.சி.யை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது.
இருவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சென்ற போது இருவரையும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.
வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர்.திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன.மண்ணெண்ணெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் “பெஸ்ட் அண்ட் க்ம்பெனி” தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள்.
காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)
2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார்.(பிரிவு 153-அ)
வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.
நீதிபதி திரு. பின்ஹே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் பின்வரமாறு:
1. ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு நாடுகடத்தல் தண்டனை.
சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு நாடுகடத்தல் தண்டனை.
2. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.
40 ஆண்டு வேறுநாடு கடத்தல் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.
வ.உ.சி. முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதெல்லாம் அரசியல் கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் மற்ற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட்டனர். கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். வ.உ.சி. செல்வந்தர். நல்ல ஆரோக்கியமான சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. சிறை ஆடைகள் முரடானவை. தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டிருப்பர்.
சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.
கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்.

1932-ல் தூத்துக்குடி வந்தார். தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.
வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை ஜாமீனில் வெளிவரும்படிக் கேட்டுக் கொண்டனர். சிவாவும் பத்மநாப ஐயங்காரும் அவருடன் சிறையில் இருந்தனர். அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டுத் தனியாக வெளி வர விரும்பவில்லை. இந்நிகழ்ச்சியில் இருந்து அவரது தைரியத்தையும்,நண்பர்களுக்கு உதவும் தன்மையையும், நேர்மையையும் நாம் உணரமுடிகிறது.
சொந்த அண்ணன் தம்பிகளுக்கும், அக்கா தங்கைகளுக்கு கூட இன்று உதவி செய்யாத நிலையில் மனிதர்கள் வாழ்ந்து வரும் நிலையில்,இன்று தனது குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து வரும் இன்றைய அரசியல் வாதிகள் போல் இல்லாமல், தன் நாட்டிற்காக, தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் இழந்து நாட்டுக்காக வாழ்ந்த வ உ சி ஐயா அவர்களின் இன்றைய 146 வது பிறந்த நாளான இன்று அவரின் நினைவுகளை போற்றும் வகையில் அவர் தமிழ் மக்களுக்காக எந்த பிரதி பலனும் பார்க்காமல் தமிழர்களின் எண்ணமும்,மனமும் சீர்படவேண்டும், என்ற ஒரு மிகப்பெரிய மகானின் சிந்தனை கொண்டு நமக்காக வ உ சி அவர்களின்  கட்டுரை புத்தகங்களை வாசித்து உங்களுடைய எண்ணங்களை சீர்படுத்தி வாழ வாழ்த்துக்கள்.கீழே புத்தகங்களின் விபரங்களை அளித்துள்ளேன்.
மனம் போல் வாழ்வு
ஜேம்ஸ் ஆலனின் “As a man Thinketh” என்ற நூலை வ.உ.சி. “மனம் போல் வாழ்வு” என்று மொழி பெயர்த்தார். மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள். எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாவும் பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின் ஒழுக்கமாக மாறுகிறது.
அகமே புறம்
ஜேம்ஸ் ஆலனின் “Out from the heart” என்ற நூலை வ.உ.சி. “அகமே புறம்” என்று மொழி பெயர்த்தார்.இந்நூல் மனோ நிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அறச் செயல்களே செய்ய வேண்டும். நமது சொற்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல மன நிலையிலிருந்து சுகமும் தீய மன நிலையிலிருந்து துக்கமும் ஏற்படுகின்றன. நாம் அறிவுடையவர்களாக இருந்தால் தீய செயல்களைச் செய்யமாட்டோம்.

#வ_உ_சி

#வ_உ_சிதம்பரம்பிள்ளை

#இந்திய_தேசிய_காங்கிரஸ்

#இந்திய_விடுதலை_இயக்கம்

#ஓட்டப்பிடாரம்

#தூத்துக்குடி

#கப்பலோட்டியதமிழர்

#V_O_Chidambaram_Pillai
#V_O_Chidambaram_Pillai

#Kappalottiya_Tamilan

#Ottapidaram

#Thoothukudi

#Tuticorin

#Swadeshi_Steam_Navigation_Company

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com