tilted sites, non directional homes

திசைக்கு திரும்பி கோணலாக இருக்கும் மனை வாஸ்து.

திசைக்கு திரும்பி கோணலாக இருக்கும் மனைகளை சதுரம், அல்லது செவ்வகமாக மாற்றினால் வீடு கட்டலாமா? இந்த கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கிறது. எனது வாஸ்து பயணத்தில் இந்த கேள்வியை கேட்க கூடிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். இதற்கு நேரடியான  எனது பதில் என்னவென்று சொன்னால், நிச்சயமாக சதுரம் அல்லது செவ்வக அமைப்பை ஏற்படுத்தி கட்டுவது சாலச் சிறந்தது. ஆனால் அனைத்து மனைகளையும் அப்படி செய்யலாமா? என்றால் செய்யக்கூடாது என்று தான் சொல்வேன்.

ஆகவே அப்படிப்பட்ட மனைகளை சாலைகளுக்கும், காம்பஸ் என்று சொல்ல முடிய திசைகாட்டி கருவிக்கும் உட்புகுத்தி பரிசோதனை செய்து, எந்த இடத்தில் காலியிடங்களை விட வேண்டும், அப்படி விடும் போது தவறு இருக்காதா? என்கின்ற ஆராய்ச்சி செய்துதான் வீடுகளை கட்ட வேண்டும். அவர்களாகவே ஒரு வாஸ்து நிபுணர் துணை இல்லாது செய்யும் பொழுது அது குற்றமாக அமைந்துவிடும்.

பழந்தமிழ் நூல்களில் மத்தளமனை, முக்கோண மனை, சங்குமனை வட்டமனை, கோனமனை,கோடாளிமனை, இப்படி பலவிதமாக மனைகளை சொல்லி இருப்பார்கள். அவைகளை மோசமான மனைகள் என்று நமது பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. ஆக ஒவ்வொரு மனைகளும் அதன் அமைப்புக்கு ஏற்றபடி பலனைதரும் அமைப்பை கொண்டுள்ளன.

1.தென்மேற்கு நீண்டிருக்கும் மனையில் தென்கிழக்கு அல்லது வடமேற்கு இல்லாது போய்விடும். இப்படிப்பட்ட மனைகள் பெண்களுக்கு நல்லது  கொடுக்காது. இந்த மனைகளை சதுரம் அல்லது செவ்வகமாக செய்யும்பொழுது கூட அந்த வீட்டின் பெண்களை பாதிக்கும். அதனை என்னதான் வாஸ்து நிபுணர் துணைகொண்டு கட்டினாலும் நிச்சயமாக பாதிப்பு கொடுக்கும்.

2. வாயு மூலை நீண்ட மனைகளில்,அங்கு தென்மேற்கு பகுதி இல்லாது போய்விடுகிறது. அதேபோல கிழக்கு நீண்ட மனைகளில் வடக்கு இல்லாது போய்விடுகிறது. இவைகளும் ஈசானியம் குறைந்த மனைகளே. இப்படிப்பட்ட மனைகளில் நிச்சயமாக ஆண்களுக்கு பாதிப்பைக் கொடுக்கும். இதனையும்  சதுரம் அல்லது செவ்வக மாற்றுகிறேன் என்று ஒருவர் மனையை ஏற்படுத்தி இல்லத்தை அமைத்தாலும், அங்கு இருக்கக்கூடிய ஆண்களின் வாழ்க்கையில் பாதிப்பைக் கொடுக்கும்.

3.அதே போல வட மேற்கு வாயு மூலை நீண்டால் ஈசானியம் இல்லாத மனையாக மாறி விடுகிறது. அதேபோல தென் கிழக்கு நீண்டு இருந்தால்  ஈசானிய பகுதியில் இடம்  இல்லாத மனையாக மாறி விடுகிறது. ஆக இப்படிப்பட்ட மனைகள்  ஆண்களை பாதிக்கக் கூடிய சூழ்நிலையை நிச்சயமாக கொடுக்கும்.

எனது வாஸ்து பயணத்தில் ஒரு நண்பரை சந்திக்கிறரேன். ஒரு எட்டு வருடங்களுக்கு முன்னால்  தமிழகத்தின் மிகப்பெரிய வாஸ்து நிபுணரை அழைத்து மிகச் சரியான முறையில் இல்லத்தை அமைத்து இருந்தார். ஆனால் மீண்டும்  வாஸ்து பார்க்க வேண்டும் என்று என்னை அழைத்தார். இந்த இடத்தில் ஏற்கனவே பார்த்த வாஸ்து நிபுணரும் மிகச்சரியான அமைப்பில் நான் சொல்லக்கூடிய அமைப்பில் இல்லத்தை அமைத்து கொடுத்திருந்தார்.அதில் ஒரு சில தவறுகள் இருந்தாலும் செய்யாதது என்னை அழைத்தவரின் தவறுதான். ஏற்கனவே பார்த்த வாஸ்து நண்பரின் தவறு கிடையாது.

  ஆக மிகப்பெரிய தவறுகள் அந்த இல்லத்தில் கிடையாது. அவர் அழைத்ததற்கு காரணங்கள் கடந்த 15 வருடங்களாக எந்த விதமான தொழிலும் அவரால் செய்ய முடியவில்லை. ஏற்கனவே அவர் அப்பா காலத்தில் செய்த தொழிலை இவர் இழுத்து மூடி விட்டார்.

  அவருக்கு உண்ட உணவு செரிமானம் ஆவதில்லை .வீட்டில் அடுப்பு பற்ற வைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது .எல்லாம் கடையில் இருந்து வருகிறது.ஒரே மகன் படித்து வேலை என்பது கிடைக்கவில்லை. சில கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதிலும் யாரும் ஒழுங்காக  வாடகை தருவதில்லை ஏன் என்றால்  அந்த  வாடகை கடைகளில் பெரிய அளவில் வியாபாரம் இல்லை.

இதற்கு காரணங்கள் என்னவென்று ஆராயும்போது, அவருடைய மனை வடக்காக 25 டிகிரிகள் திரும்பிய நிலையில் ஒரு சாலை ஒன்று வடக்கு செல்கிறது. ஆனால் அவருடைய மனை ஒரு 500 அடி நீளத்திற்கு  அக்னியை இழுத்த அமைப்பில் இருக்கிறது. தெற்குப்பகுதி அதிகமாகவும், வடக்கு பகுதி குறைவாகவும், மேற்கு பகுதி குறைவாகவும், கிழக்குப் பகுதியில் அதிக அமைப்பிலும் அதாவது தென்கிழக்கு  இழுத்து அமைப்பிலும் இடம் இருக்கிறது. இந்த இடத்தில் மொத்த இடத்திற்கும் ஈசானியம் அடிபட்டு போய்விடுகிறது. ஆகவே இவரால் மொத்த இடத்தின் பாதிப்பு என்பது அவருக்கு பேசப்பட்டு அவரால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. நான் சென்ற பிறகு உடனடியாக அவருக்கு கையில் பணம் இல்லாத காரணத்தால், அவருடைய மனையில் வடக்குப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு சிறிய பகுதியை விற்பனை செய்யச் சொல்லி அதிலிருந்து தொகையை எடுத்துக் கொண்டு, வேறொரு இடத்தில் மனையை வாங்கி வாஸ்து அமைப்பில் அமைக்கச் சொன்னேன். அதற்கு பிறகு படிப்படியாக அவருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டம் செல்லக் கூடிய நிலை  ஏற்பட்டது.அவர் மகன் புதியதொழிலை நிறுவி  தற்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள் .இந்த மாற்றம் என்பது இரண்டு வருடங்களுக்குள் மிகச்சிறப்பாக நடந்து விட்டது.

ஈசானியம் குறைகிறது என்றாலே மனித உடலில் வாய் சம்பந்தப்பட்ட விஷயம், தொண்டை சம்பந்தப்பட்ட விஷயம் , ஆக உணவு செரிமானம் ஆகவில்லை, உணவு உண்பதற்கு விருப்பமில்லை என்று சொன்னால் தொண்டை சார்ந்த  புண்கள் அல்லது முன் கழுத்து கழலை நோய் என்று சொல்லக்கூடிய தைராய்டு பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த இடத்தில்   இவர் ஒரு ஆண் மற்றும் அவருக்கு ஒரு ஆண் குழந்தை  ஆக ஒருவருக்கு கேள்வி இருக்கலாம் எப்படி ஆண் பாதிப்புள்ள இடத்தில் ஆண்கள் இருக்கலாம் என்று?

இதில் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த இடம் என்பது அவர் தாயாருக்கு அவருடைய தந்தை சீதனமாகக் கொடுக்கப்பட்டது.தந்தைக்கு இவரின் மனைவி ஒரே மகளாவார். ஆக பெண் சார்ந்த மனையாக இருப்பதன் காரணமாக அவருடைய உயிர் சார்ந்த இழப்பு என்பது இல்லாமல் காப்பாற்றப் பட்டது.

ஒரு சில இடங்களில் திசைகாட்டி என்பது 45 டிகிரி திரும்பியிருக்கும். இதனை வீதிசைமனைகள் என்று சொல்ல வேண்டும். அப்படி இருக்கக் கூடிய மனைகளில் ஒரு பக்கம் இழுத்த அமைப்பாக இருக்கும் பொழுது நிச்சயமாக பாதிப்பைக் கொடுக்கும். திசைகாட்டி 22 டிகிரி திரும்பினால் எவ்விதமான தவறும் கிடையாது.அதிகமாக 30 டிகிரிகள் கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் எந்த மனையும் சுருங்கக் கூடாது. ஆக திசைகாட்டி திரும்பியிருந்தால், அதுவும் ஒரு பக்கம் அமைப்பில் மனைகள் இருந்தால்திசை மூடங்கள் ஏற்பட்டுவிடும்.

ஆக மனையின் வடிவங்களைப் பொருத்து பழந்தமிழ் நூல்கள் மூன்று வகையாகப் பிரிக்கின்றன.

1. ஆண் மனை

2.பெண்மனை

3.  இரண்டுக்கும் சேராத   ஒருவகை வடிவத்தில் உள்ள மனைகளை அலிமனை என்று கூறுகின்றோம்.

ஆக பெண்மனைகளில் இருக்கும் தோஷங்களை, சாலைகளுக்கு தகுந்தாற்போல மாற்றம் செய்து தோஷங்களை ஓரளவு குறைக்கலாம். ஆண் மனைகளிலும் சாலைகளுக்கு தகுந்தாற்போல அமைப்பை ஏற்படுத்தி தோஷங்களை கட்டுப் படுத்தலாம். ஆனால் அலி மனைகளில் தோஷங்களை குறைப்பது என்பது மிகவும் கடினம். ஒருசில இடங்களில் ஆண் மனைகளை, பெண்மனைகள் ஆகவும், பெண்மனைகளை ஆண்மனைகளாகவும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அங்கிருக்கும் வீட்டு மக்களின் ஆண் பெண் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் மனைகளை மாற்ற வேண்டும். அப்படி செய்யாது நமது மனம் போன போக்கில் செய்தால், ஆண்மனைகளில் பெண்களுக்கும், பெண் மனைகளில் ஆண்களுக்கும் தீங்கு நேரும்.

அப்படிப்பட்ட மனைகளை ஒருவித அமைப்பில் கழித்து விடும்பொழுது உறவினர்கள் பெயரில் எழுதி வைக்கலாம். ஆனால் அதற்கு நாம் சொந்தம் கொண்டாட முடியாது. சொந்தம் கொண்டாடும் போது கூடவே தொந்தரவும் கொண்டாடிக் கொண்டு வரும். எக்காரணம் கொண்டும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் எழுதிவைத்துவிட்டு சுற்றுச்சுவர் எப்படி பிரித்துக் கொண்டாலும் நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம்.

tilted sites, non directional homes
tilted sites, non directional homes
error: Content is protected !!