பேசி பழகுவோம் வாருங்கள்…

புதிதாக நாம் ஒருவரை பார்க்கின்றபோது அவரிடம் நாம் பேசத் தொடங்குவதற்கு முன்பே  நம்மை  எடை போட்டு விடுகிறார்கள் .

உடை நடை தோற்றம் பொலிவு தூய்மை போன்ற அமைப்புக்களைக் கொண்டு அவர்களுடைய மனதில் தோன்றும் எண்ணங்கள் அடிப்படையில்தான் ஒருவரிடம் பழகும் விதம் அமைகின்றது.

செருப்பு பூமியை  தேய்த்து சரக் சரக் சத்தத்தோடு அலட்சியமாக நடப்பவர்கள் பிறரின் வெருப்பை சம்பாதித்துக் கொள்கின்றார்கள். இரண்டு சட்டை பொத்தான்களை திறந்து விட்டுக்கொண்டு இரவின் நிலவு வெளிச்சத்தில் நடப்பதுபோல கருதுபவர்கள். மற்றவர்களின் மதிப்பீட்டில் மார்க்கெட் கிடைப்பதில்லை.

அளவான முடியோடு எண்ணெய் தேய்த்து கலையாமல் காப்பாற்றப்படும் போது, தலைக்கு சிறப்பைத் தருகிறது. கலைந்த முடியும், அக்கறையற்ற தோற்றமும், திரைப்படத்திற்கு மட்டும் பொருந்தும்.

நல்ல தெளிவாக இருக்கும்  முகம், தூய ஆடை சுத்தப்படுத்தப்பட்ட நகங்கள் என ஒருவரின் வெளித்தோற்றம் அவரைப்பற்றிய அபிராயத்தை மற்றவர்களுக்கு நல்ல மதிப்பீடாக பார்க்கப்படுகிறது.

புதிதாக பழகுகின்ற மக்களிடம் வளவள என்று பேசாமல் சுருக்கமாக தெளிவாக பணிவாக பேசும்போது ,அவர்களையும் அறியாமல் தொடர்பு வலையை பின்னி வைக்கிறோம். யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் தொடங்குகிற பேச்சு. பரஸ்பர அன்பை விதை விடச் செய்கிறது. ஒருவரிடம் புதிதாக பேசத் தொடங்கும்போது, ஒரு சின்ன ஒத்திகை மனதிற்குள்ளாக பார்த்துவிட்டு தொடங்கும்போது, வார்த்தைகள் சரளமாக வந்துவிடும். குழப்பமில்லாத கருத்து பரிமாற்றங்கள் இருக்கும்.

ஒருவருடைய பெயரை கேட்கும் பொழுது அலட்சியமாக இருக்க வேண்டாம். பெயர்களை நினைவு வைத்து தான் ஒருவருடைய இதயத்தில் இடம் பெற முடியும். எனவே ஒருவரின் பெயரை புதிதாக கேட்கும்பொழுது திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். நீண்டகால நினைவாற்றல் கொண்டு  பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல ஒருவரோடு பேசும் போது எச்சில் தெரிக்காமல் பேசுவது சாலச்சிறந்தது . மற்றும் ஒருவருடைய சொந்த விஷயங்களுக்கு உள்ளே நுழைந்து நாம் கருத்து சொல்வது கூட தவறானது. அதுபற்றி அவர்களிடம் பேசுவதை கூட தவிர்த்துக் கொள்வது நல்லது.  ஒருவரிடம் அவர்களுடைய சொந்த விஷயத்தை பேசும் பொழுது கண்டிப்பாக பேசுவதில் நாசூக்காக ஒதுங்க ஆரம்பித்து விடுவார்கள். இது போன்ற பழக்கங்களை நாம் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது பணம் சார்ந்த நிகழ்வுகளில் தொடர்புகள் மூலமாக வெற்றி பெறுவோம். பெருமையோடு வாழ்வோம்.