இது வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை எப்படி…?
மீண்டும் உங்களுக்கு ஒரு வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து வாழுங்கள் என்று கொடுக்கப்பட்டால், எதை எதைத் திருத்திக் கொள்வீர்கள்…?
எதை எதைச் செழுமைப்படுத்திக் கொள்வீர்கள்…?
அல்லது இதே வாழ்வை தான் வாழ்வீர்களா…?
நன்றாகப் படிக்காமல் விட்டு விட்டு விட்டேன்… திரும்ப வாழ்க்கை கிடைத்தால், திருத்தி வாழ்வேன்.
2. நல்ல வேலைக்கு முயற்சிக்காமல் விட்டு விட்டேன்…
3. நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவில்லை…
4. நல்ல பிள்ளைகள் அமையவில்லை…
5. நல்ல லட்சியங்களை எட்ட முடியவில்லை…
முதலில் நாம் சொல்வது, பார்ப்பது, கேட்பது… மற்ற எல்லாவற்றையும் இரண்டாவது முறை செய்தால் தப்பா என்ன…? வாழ்க்கையில் பல பேர் இந்த இரண்டாவது முறையே நம்புவதால் தான், அவர்களால் முதலாவதாக எப்போதும் வர முடிவதில்லை… முதல் சொல்லை தொடங்கும் போதே, செயலில் முதல் அடியை எடுத்து வைக்கும் போதே, முறையான முழுப் பயிற்சியுடன், நம்பிக்கையுடன், தெளிவாகத் தீர்மானமாகச் செயல்பட்டால் தான், இரண்டாவது என்கிற நினைப்பிற்கே இடமிருக்காது…
வாழ்க்கை தவறுகளாலும் நிறைந்தது தான்… ஆனால் செயல்படும் ஒவ்வொரு நொடியும் கவனமாகச் செயல்பட்டால் தவறுகள் குறைந்து நிறைகளே ஏற்பட வாய்ப்புகள் பெருகும்.
தவறு என்பது தவறிச் செய்வது…
தப்பு என்பது தெரிந்து செய்வது…
தவறு செய்தவன்-திருந்தப் பார்க்கணும்…
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்…
அமெரிக்க அறிவியலாளர், எழுத்தாளர், அரசியலாளர், மிகப் பெரிய சிந்தனையாளர், பெஞ்சமின் பிராங்க்ளின் – 87 வயது வரை வாழ்ந்தவர்… மேலே உள்ள கேள்வி அவருக்கும்… அவரின் பதில் இதோ :
“இதுவரை நான் வாழ்ந்த வாழ்கையில் எந்த வருத்தமும் எனக்கில்லை… நான் நன்றாகவே வாழ்ந்திருப்பதாகவே கருதுகிறேன்… மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால், இதே வாழ்க்கையே வாழ்வதாக ஆசைப்படுகிறேன்”
நண்பர்களே… தவற விட்டதை நினைத்து வருந்துவதா வாழ்க்கை…?
நேர்ந்து விட்ட தவறுக்களுக்காக ஏங்குவதா வாழ்க்கை…?
ஒவ்வொரு நொடியையும் தவறே நேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்க்கை… வாழும் போதே வாழ்க்கையை வசப்படுத்தி வாழ்வது, வருத்தமில்லா வாழ்க்கையாக வடிவமைத்துக் கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் திருத்தமில்லாத வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழலாம் அல்லவா…?