தனி மனித ஆளுமை

தனி மனித ஆளுமை

 

   ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலைநாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக்கென்று ஒரு பெயர், ஒரு identity, ஒரு அங்கீகரிப்பு இருக்கவேண்டும் என்ற விழைவு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் மனிதத் தலைகளில் என்னுடையதும் ஒன்று என்றில்லாமல், “அதோ, அங்கே புள்ளிபோல் தெரிகிறது பார். அதுதான் நான்” என்று அடையாளம் காட்ட ஏங்குகிறது நம் மனம். டிவி கேமரா நம் பக்கம் திரும்பும் போதெல்லாம் யாராவது பார்க்க மாட்டார்களா என்று கையை ஆட்டுகிறோமே அதுவும் இத்தகைய உந்துதலால் தான்.

 

 

ஏதாவது ஒரு வகையில் தன் சிறப்பை, தன் individuality-ஐ பிறர் அறிய வெளிக்காண்பிக்க வேண்டும் என்ற முனைப்பு உயிருள்ளவரை தொடரும்.இதுபோல் நம்மை தனியாக வட்டம் போட்டுக் காண்பிக்க வேண்டும்; நம் மேல் ஒளிக்கற்றைகள் தொடர்ந்து பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமே, அது நிகழ்வது எப்படி? எதைச் செய்தால் அது சாத்தியமாகும்? அதற்கு முதல்படியாக நீங்கள் ஏதாவதொரு துறையில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சரி. அது போதுமா? இல்லை. நீங்கள் வெற்றிபெற்றவர் என்பதை உங்களைச் சுற்றியுள்ள உலகம் அறிந்திருக்க வேண்டும். அதுதான் மிக மிக முக்கியம்.

 

இத்தகைய சிறப்பான தனிநிலை அடைவதற்கு முதல் இன்றியமையாத தேவை சுய மதிப்பு (self-esteem) தான்.தன்னம்பிக்கை, தன் மேன்மையைப் பற்றிய எண்ணம் சரியாக தெளிவாக இருந்தால்தான் அதனை அடிப்படையாகக் கொண்டு நாம் ஆளுமை உள்ள மனிதர்களாக மாறமுடியும். நாம் நம்மைப் பற்றி எவ்வளவு தூரம் ஆழமாக அறிந்திருக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் வெளி உலகத்தையும் கட்டி ஆளமுடியும்.நாம் நம்மை மாற்றிக் கொள்வதன் மூலம் வெளி உலகம் நம்மை அணுகும் முறையை மாற்றி நாம் சாதனை புரியலாம்.

 

இத்தகைய செயல்பாடுகளை முழுதும் அறிந்த பலர் தம் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நேரு, எம்ஜியார் போன்றவர்கள் மக்கள் மனதைத் தங்கள்பால் திருப்பவும், என்றைக்கும் தன் பர்ஸனாலிடிக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் இதுபோன்ற technique களைத்தான் முழுமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.மக்களால் கொண்டாடப்படும் பெரிய மனிதர்கள் பலர் எல்லோரும் சுலபமாக அணுக முடியாதபடி, எட்டாத தூரத்தில் தங்களை வைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.

 

இது தன்னிச்சையாக நிகழ்வதல்ல. அது போல் ஒரு “தொலைவு” வைத்துக் கொள்வது மிக முக்கியம். இந்தப் பழமொழியை மறக்கக் கூடாது. தூரத்துப் பச்சையாகவே இருக்க வேண்டும். என்பது ஒரு டெக்னிக். அதாவது “நான் உங்களை விடச் சிறந்தவன். என்னை நெருங்குவது எல்லோருக்கும் சுலபத்தில் கிட்டாது”என்ற செய்தி அடுத்தவருக்கு உணர்த்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் பிறர் மனத்தில் ஒரு சலிப்புத் தோன்றிவிடும். “ஒகோ…, அவரா” என்பார்கள்! எல்லோரையும் உங்கள் வீட்டு அடுக்களைக்கோ, படுக்கையறைக்கோ அனுமதிக்க முடியுமா? சிலரை வாசலிலேயெ பேசி அனுப்பிவிட வேண்டும். சிலரை வரவேற்பறையில் (drawing room, foyer) அமர வைத்து தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து, சில வார்த்தைகள் சம்பிதாயமாகப் பேசி அனுப்புகிறோம். வெகு சிலரையே நம் வீட்டுக் கூடத்துக்குள் (living room) அழைக்கிறோம். அதுபோல் தரம் பார்த்து, தகுதி பார்த்து, ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயெ ஒவ்வொருவரையும் நிறுத்த வேண்டும்.

 

உங்களைச் சுற்றியுள்ளவர் மனங்களில், “யார் இங்கு ஆளுமை செலுத்துபவர்” (who is in-charge) என்பது ஐயத்துக்கு இடமின்றி உணரப்பட வேண்டும். நீங்களாக முடிவு செய்து குறிப்பிட்ட நபரை அணைக்கவோ, வெட்டவோ செய்ய வேண்டுமேயன்றி, அடுத்தவர் உங்கள்மேல் உரிமை எடுத்துக் கொண்டு தங்கள் முடிவுகளை உங்கள் மேல் திணிக்க இடம் கொடுக்கக் கூடாது.நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திலோ, பங்கெடுக்கும் பொது அமைப்பிலோ நீங்கள் ஒரு மேளாண்மை பதவியில் இருந்தால், உங்கள் ஒவ்வொரு அசைவும், உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் கவனமாகக் கண்காணிக்கப் படுகிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் தரம் குறைந்தாலும் உங்களைப் பற்றிய இமேஜ் கீழே சரிந்துவிடும்.

 

பெரிய பதவியை அடைவதால் மட்டும் ஆளுமை வந்துவிடாது. தன்கீழ் பணியாற்றுபவர்களைக் கட்டுப் படுத்தமுடியாத, மேலாண்மை செலுத்தமுடியாத பல மேலதிகாரிகளை உணர்ந்திருக்கின்றோம்.தன்னம்பிக்கையில்லாமலும், பிறர் மனத்தை அடக்கி, அதனைத் தம் ஆளுமைக்குள் கொண்டுவர இயலாதவர்களாகவும் பல பெரிய பதவிகளை வகிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊன்றிப் பார்த்தால் இவர்களுடைய “மெயின் சுவிட்ச்” இன்னொருவர் கையில் இருக்கும். பதவிக்கேற்ற ஆதிக்கத்தை இவர்கள் செலுத்தவில்லையென்றால், இவர்கள்மேல் இன்னொருவர் ஆதிக்கம் செலுத்த முற்படுவது திண்ணம்.நம்மில் பலர் “கித்தாய்ப்பாகப்” பேச ஆரம்பிப்பார்கள்.

 

“இப்போது பார். இவனை எப்படி விரட்டறேன் பார். நான் போடற போட்டிலே அவன் கதறிக்கொண்டு ஓடிவருகிறான் பார்” என்று வீராய்ப்பாக தொலைபேசியை எடுத்து சுழற்றுவார்கள். சிங்கம் போன்ற கர்ஜனையுடன் ஆரம்பித்து “மியாவ்” என்று முடிப்பதுபோல “நீங்க பார்த்து செய்யுங்க. ஹி…ஹி” என்று சொணங்கிவிடுவார்கள். இதுபோல் இல்லாமல் நீங்கள் தலைமை வகிக்கும் எந்த நிகழ்விலும் உங்கள் பேச்சு ஓங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் பலம், எதிராளியின் பலம், அவர்தம் பின்புலம் எல்லாவற்றையும் துல்லியமாக எடைபோட்டு, நாம் தொடங்கிய விறைப்பிலேயே கடைசிவரை தொடர வேண்டும்.

 

ஃபோனில் பேசும்போது “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு” என்றிருக்க வேண்டும். “வழவழா கொழகொழா” என்று நையக்கூடாது. “இவன் என்ன சொல்லப் போகிறானோ” என்று எதிராளி கவனத்துடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.இன்னொரு முக்கியமான விஷயம்: தலைமையேற்கும் நிலையில் உள்ள உங்கள் சொல்தான் கடைசியாக இருக்க வேண்டும்.

 

“தட்டையான அமைப்புமுறை” (flat organization) கொண்ட நிறுவனங்களில்கூட தலைமை என்று ஒருவர் உண்டு. இது எல்லா உயிரினங்களிலும் உள்ள இயற்கை ஆகும்.நீங்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை முழுமையும் பிறர் புரிந்துகொள்ளும்படி உரைக்க வேண்டும். உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறி நிறுத்திவிட வேண்டும். (ஆனால், உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை கடைசியில்தான் வெளிப்படுத்த வேண்டும்!)இதெல்லாம் ஆளுமையின் அடையாளங்கள். நம் வார்த்தைகளில் “குழைவு” வந்துவிடக் கூடாது. இது ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு. உங்கள் பலவீனங்கள் பிறரால் கணிக்கப்பட்டால் ஆளுமை அவர்கள் கையில் சேர்ந்துவிடும்!பதறாமல், உதறாமல், வெளிப்படையாக உணர்ச்சிகளைக் கொட்டாமல், நிதானமான, ஆழமான குரலுடன் உங்கள் கருத்துக்களையும் முடிவுகளையும் எடுத்துக் கூறினால், அதன் தாக்கம் ஏற்றமுள்ளதாக அமையும்.

 

 

உத்தரவுகள் “தொங்கும்” சொற்களாக இருக்கக் கூடாது. உறுதியாக இருக்கவேண்டும். எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது நிறைவேற்றப் பட்டதா – என்பதைக் கண்காணிக்கவேண்டும். இல்லையெனில் உங்கள் மேல் அசட்டையாக இருக்கத் தொடங்கி விடுவர். “அவர் அப்படித்தான் ஏதாவது சொல்லுவார். ஆனால், செய்யல்லைன்னா கண்டுக்க மாட்டார். பேசாம விடு” என்பார்கள். சொற்கள் தன்னிச்சையாக வந்து விழக்கூடாது. நம் முழு ஆளுமையுடன் வரவேண்டும்.பொது இடங்களுச்சென்றால் நீங்கள் நாலுபேர் முன்னால் மதிக்கப்பட விரும்புகிறீர்கள். பிரபலமான கோயில்களுக்குச் சென்றால், முண்டியடித்து, நெட்டித்தள்ளி தரிசனம் செய்யாமல், தனியாக கர்ப்பக் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப் படுவதை விரும்புகிறீர்கள்.

 

 

எங்கு சென்றாலும் உங்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். இவ்வகை சிறப்பு மரியாதைகள் நீங்கள் பெறவேண்டுமானால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக, ஒரு தலைவனாக, சிறப்பு வாய்ந்தவனாக பிறரால் உணரப்பட வேண்டும். வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அந்த வெற்றி எட்டுத் திக்கும் எட்டும்படி முரசு கொட்டப்பட வேண்டும்!

 

 

error: Content is protected !!