தீபாவளியில் குபேர பூஜை !

குபேர தீபாவளி

தீபாவளியில் குபேர பூஜை !

நிறைந்த பொருளுடன் இருக்கவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான்; அது பேராசையல்ல. நிறைந்த பொருளால் சகல சுகங்களும் ஆனந்தமும் பெறுவதோடல்லாமல், நம்மைச் சுற்றியுள்ளோர் பலரும் ஆதாயம் பெற்றிட வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அவனுக்கென்ன! குபேர வாழ்க்கை வாழ்கிறான்!’ என்று சகல சௌபாக்கியங்களைப் பெற்றவர்களைப் பார்த்துக் கூறுகிறோம்.

இலங்கேஸ்வரன், சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன். சிறந்த சிவபக்தன். தொடர்ந்து பலவிதமான தவங்கள் செய்ததால் சிவபிரான் மனம் குளிர்ந்து குபேரனை வட திசைக்கு அதிபதியாக நியமித்தார். ரிக் வேதத்தில், குபேரனுடன் மகாலட்சுமியும் தனதேவதைகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி – பதுமநிதியை குபேரன் ரட்சிக்கின்றார். சங்க,பதும நிதிகள் அளவற்ற பொருட் செல்வத்தைக் கொண்டமையால், குபேரனின் இருமருங்கிலும் இவர்கள் வீற்றிருப்பார்கள்.

சிற்ப சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி அளகாபுரியில் குபேர பட்டணம் அத்தாணி மண்டபத்தில், தாமரை மலர்மீதுள்ள ஆசனத்தின் மெத்தை மீது, ஒரு கை அபய முத்திரை காட்ட, கிரீடம் முதலிய சொர்ணாபரணங்களுடன் திருமுத்துக்குடையின்கீழ் குபேரன் வீற்றிருக்கிறார். அவரது வலப்புறத்தில் சங்க நிதி தேவதை (ஆண் உருவம்) தன் இடது கையில் வலம்புரிச் சங்கும், வலது கை வர முத்திரையுடனும் இருக்கிறார்.

குபேரனுடைய இடப்புறத்தில் பத்ம நிதி தேவதை (ஆண் உருவம்) தன் வலக் கையில் பத்மத்துடனும், இடக் கை வர முத்திரையுடனும் இருக்கிறார். குபேரனுடைய இடப்புறம் அவரது தர்மபத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர் ஏந்திய நிலையில், வலக்கையால் தனது கணவரை அணைத்த வண்ணம் இருக்கிறார்.

சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜயோகத்தை அளிக்கவல்லவர். தனலட்சுமியும் தைரியலட்சுமியும் சர்வசக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால், தனத்திற்கும் வீரத்திற்கும் ராஜாவாகிறார்.

திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால், கோபாதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார். யட்சர்களுக்குத் தலைவனான குபேரன் ஸ்ரீ ராஜாராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தை எப்போதும் ஜெபித்த வண்ணமிருப்பவர். இதனால சகல சக்திகளையும் தன்வயம் கொண்டு, பக்தர்களுக்கு இல்லையென்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொள்கிறார்.

எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால் தான் பூஜையின் பலன் கிட்டுவதால், கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான,

“ராஜதிராஜய ப்ரஸஹய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே|
ஸ மே காமாந் காமகாமா

ய மஹயம்
காமேஸ்ரே வைஸ்ரவனோ ததாது
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம||”

என்ற சுலோகத்தைக் கூறியவாறு மங்களாரத்தி செய்கிறார்கள். தீபாவளி தினத்தன்று குபேர பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும்.