மனத்தடைகளை மனிதன் தாண்டி வரவேண்டுமா?

மனத்தடைகளே மனிதனுக்கு தடை

vastu in tamilnadu
vastu in tamilnadu

 

 

 

 

 

 

வணிகத்தில் பலகோடி ரூபாய் ஆதாயம் பெற்ற மனிதரின் உதடுகள் உச்சரிக்கும் முதல் வார்த்தை, “கடவுளே நன்றி!” எதிர்பாராமல் பிச்சைப்பாத்திரத்தில் பத்து ரூபாய் நோட்டு விழுந்தால், பிச்சைக்காரர் சொல்வது, “கடவுளே நன்றி!”, நிறைய மதிப்பெண் வாங்கிய மாணவர்கள், நல்ல சேதி கேட்கும்

தாய்மார்கள், எல்லோரும் சொல்லும் வார்த்தை, “கடவுளே நன்றி!”.

இந்தக் கடவுள் யாரென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? கடவுள் யாரென்ற கேள்விக்கு ஓஷோ அருமையான விளக்கமொன்றைச் சொன்னார்.

“ஒரு சின்னப் பூவிலிருந்து பெரிய பாறை வரை, ஒரு சின்னப் புழுவிலிருந்து நட்சத்திரம் வரை, இங்கே இருக்கும் எல்லாவற்றோடும் இணக்கமாய், மகிழ்ச்சியாய், அவர்களின் நம்பகமான நண்பராய் இருப்பவருக்குத்தான் கடவுள் என்று பெயர்”.

உண்மைதானே! கடவுள் இல்லை என்று சொல்பவருடன்கூட கடவுள் ஒரு நாளும் சண்டை போட்டதில்லை. கடவுள் தன்மை என்பது மகிழ்ச்சி. “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்றால், என்ன பொருள்? கொண்டாட்டமே கடவுள் என்று பொருள்.

பழங்காலங்களில் மரணம்கூட கொண்டாடக்கூடிய விஷயமாய் இருந்தது. இன்றும்கூட அதன் நீட்சியாய் இறுதி ஊர்வலங்களில் இசைக்கு இடமிருக்கிறது.

வாழ்வின் தொடக்கம் – வாழ்வின் வளர்ச்சி – வாழ்வின் நிறைவு என்று எல்லாமே இந்த மண்ணில் கொண்டாட்டம்தான்.

மனிதமனம், இந்த உண்மையை உணர்ந்து கொள்வதில்லை. நினைத்துப்பாருங்கள். எந்த சீதோஷ்ணத்திலாவது, அந்த சீதோஷ்ணத்தை அனுபவிப்பதில் நமக்கு சுகமிருக்கிறதா?

வெய்யில் காலத்தில் ஏசி வேண்டியிருக்கிறது. குளிர்காலத்தில் கம்பளி தேவைப்படுகிறது. தரப்படுகின்ற ஒன்றை அதன் தன்மையுடன் ஏற்பதில் நமக்குத் தடைகள் இருக்கின்றன. அந்தத் தடைகளே மனத் தடைகளாகப் பெருகுகின்றன.

மனத்தடைகளை மனிதன் தாண்டி வரத்தான் நினைக்கிறான். ஆனால் அந்தத் தடைகளிலேயே தேங்கிப் போவதில் ஒருவகை சுகத்தை உணர்கிறான்.

இந்த உலகில் பல மனிதர்கள் வாழ்வை மகிழ்ச்சியாகக் கொண்டு செலுத்தப் பழகியிருக் கிறார்கள். அவர்களின் உள்நிலை அமைதியை ஒருவராலும் அசைக்க முடியாது. ஒரு வேளை வாழ்வின் சில சம்பவங்கள் அவர்களுக்குத் துயரம் தந்தாலும் அந்தத் துயரிலிருந்து அழகாகவும் இயல்பாகவும் மீண்டுவிடுவார்கள்.

அத்தகையவர்களுடன் உறவு கொள்வதும் நட்பு பூண்பதும் மனதை மிகவும் வலிமையாக்கும். சில மனிதர்களைப் பார்த்தாலே நமக்கு மகிழ்ச்சி வருகிறது. அவர்களுடன் பேசும்போது உற்சாகமாய் இருக்கிறது. இந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அவர்கள் பொட்டலம் கட்டி நம் கையில் திணிப்பதில்லை.

அவர்களின் இருப்பு, அசைவு, பேச்சு எல்லாமே மகிழ்ச்சியின் நிலைக்களன்களாய் விளங்குகின்றன.

பெரியவர்களைத் துணைக்கழைத்தல் என்பதை வாழ்வின் முக்கிய அங்கமாகவே நீதி நூல்கள் சொல்கின்றன. வயதால், படிப்பால், பக்குவத்தால், அனுபவத்தால் பெரியவர்களின் உடனிருப்பு நம்மை மிகச்சீராக வழி நடத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

யார் வீட்டிலாவது துக்க நிகழ்வு ஏற்படும் போது அவர்களை சந்திக்கச் செல்கிறீர்கள். அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். அருகே சென்று அமர்கிறீர்கள். உங்களுக்கும் அழுகை வருகிறது. அது அவர்களுக்கு வந்த சோகத்தை நினைத்தும் இருக்கலாம். எப்போதோ ஏற்பட்ட சொந்த சோகத்தை நினைத்தும் இருக்கலாம்.

அவர்கள் அழுது அழுது புதிய சோகத்தைக் கரைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் அழுது அழுது பழைய சோகத்தைப் புதுப்பித்துக் கொள்கிறீர்கள்.

அடிக்கடி புதுப்பித்துக்கொள்ள சோகம் ஒன்றும் டிரைவிங் லைசன்ஸ் அல்ல.

இன்னோர் உதாரணத்தைப் பாருங்கள். மகிழ்ச்சியான குடும்பம் ஒன்றின் விசேஷத்தில் பங்கேற்கிறீர்கள். அண்ணன் தம்பி அக்கா தங்கை மாமன் மைத்துனன் என்று எல்லோரும் ஒருவருக்கொருவர் பரிவாகவும் துணையாகவும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது உங்களுக்கு உங்கள் குடும்பத்தின் நினைவும் உறவுகளின் நினைவும் வருகிறது.

வீட்டுக்கு வந்தாலும் உங்கள் சகோதரர் களிடமோ மாமன் மைத்துனரிடமோ தொலை பேசியில் அழைத்து நலம் கேட்கிறீர்கள். மகிழ்ச்சியாய் உணர்கிறீர்கள்.

மனம் அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குகிறது. முதல் உதாரணத்தில் ஒருவரின் சோகம், உங்களுக்குள் இருக்கும் சோகமான பதிவுகளைத் தூண்டி வெளிவரச் செய்கிறது. இரண்டாவது உதாரணத்தில், ஒருவரின் மகிழ்ச்சி, உங்களுக்குள் இருக்கிற மகிழ்ச்சியின் பதிவுகளைத் தூண்டி வெளிவரச் செய்கிறது.

மீண்டும் முதல் உதாரணத்திற்கே வாருங்கள். சோகம் நடந்த இடத்திற்கு ஒரு பெரியவர் வருகிறார். ஆறுதலாகப் பேசத் தொடங்குகிறார், வாழ்வின் நிலையாமையை உணர்த்துகிறார். துயரத்தில் இருப்பவர்களை அழ அனுமதிக்கிறார். அதே நேரம் அவர்கள் அந்த அழுத்தத்திலிருந்து வெளியே வரவும் உதவுகிறார். இறுக்கமான சூழலை இளக்கி இயல்பாக்குகிறார்! பக்கத்தில் இருப்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள்!

“இதுக்குத்தாங்க பெரியவங்க வேணுங்கறது”.

அந்த மாற்றத்தை அவருடைய வயது மட்டுமே செய்துவிடவில்லை. அவருடைய படிப்பு, அனுபவம், எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய இயல்பு அவரை பக்குவமான மனிதராக செதுக்கி இருக்கிறது.

இந்த அம்சங்களை வாழ்வில் வருவித்துக் கொள்வதற்கு வயதாகும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இளைய வயதிலேயே வாசிக்கும் அனுபவத்தாலும் நேசிக்கும் மனப்பான்மை யாலும் இந்த அம்சங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மனம் எளிதில் மயங்கக்கூடியது. அதற்கு தேவையான உறுதியைத் தந்தால் அதுவே முனைந்து மயக்கங்களைத் தகர்க்கும். வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் நம்மை செதுக்கும் உளிகளே தவிர சிதைக்கும் தீமைகளா என்பது நம்முடைய மனப்பான்மையில்தான் இருக்கிறது.

இதற்கு வயதோ வாழ்க்கைச் சூழலோ தடையில்லை. மனதின் அணுகுமுறையே மகத்துவங்களைச் செய்கிறது. திருஞான சம்பந்தரை “சிறிய பெருந்தகை” என்கிறார் சேக்கிழார். கண்ணகியை “சிறு முது குறைவி” என்று கோவலன் சொல்வதாய் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

பெரிய மனம் கொண்டவர்களின் பழக்கமும், சிறந்த நூல்களைத் தேடிப் படிக்கும் விருப்பமும், நமக்கு எதிராகவும் புதிராகவும் தோன்றும் மனம் எனும் கருவியை நமக்கு சாதகமான கருவியாய் மாற்றசொல்லிக் கொடுக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.