கரி நாட்கள் என்றால் என்ன?

கரிநாள் என்றால் என்ன?

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்குக் காரணம் என்ன?

தென்னிந்தியாவில்தான் #கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.

இந்நாட்களில் சுபநிகழ்ச்சிகள் (விசேடங்கள்) ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர். தியாஜ்யம் என்றும் சொல்கின்றனர். ஏன் இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்பதற்குப் #ஜோதிடர்களே பெரிய அளவில் விளக்கம் தருவதில்லை.

சிலர் கரிநாளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். முன்னெல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லை எனக் கூறிடுவர்.

சித்திரை முதல் மாசிமாதம் முடிய உள்ள 30 கரிநாட்களும் உதவா நாட்கள் என்றும், பங்குனியில் உள்ள கரிநாட்கள் நான்கும் மிகுந்த தீமையான நாட்கள் என்றும் கூறப்படுகின்றன. ஆக, உதவாநாட்கள் என்றும் மிகுதீமை நாட்கள் என்றும் குறிப்பிடப் படுகின்ற காரணத்தினால் இந்த 34 நாட்களிலும் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதனால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயமும் இந்த நாட்களில் மங்கள(சுப) நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்த்து வந்துள்ளனர்.

ஆனால்,
சித்திரை முதல் மாசிமாதம் முடிய உள்ள 30 கரி நாட்களை ஏன் உதவா நாட்கள் என்று கூறுகிறோம்?
பங்குனியில் உள்ள நான்கு #கரிநாட்களையும் ஏன் மிகுந்த தீமையான நாட்கள் என்று கூறுகிறோம்?
என்பதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த நாட்களைக் கரிநாட்கள் என்று #தமிழர்கள் மட்டுமே தவிர்க்கின்ற காரணத்தினாலும், அதிலும் குறிப்பாகப் பொங்கல் திருநாளன்று கரிநாளாக உள்ள காரணத்தினாலும் இந் நாட்களில் ஏதோ ஒரு காரணத்தினால் தமிழர்களுக்குப் பெரும் தீங்கு நடந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த சமுகத்திற்கும் தீங்கு நடைபெற்ற காரணத்தினால்தான் இந்த நாட்களைத் தமிழர்கள் கரிநாள் என்று குறிப்பிட்டு, இந் நாட்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்த்து வருகின்றனர் எனக் கருத வேண்டியுள்ளது.

உதாரணமாக 2004 ஆண்டு, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள #ஸ்ரீ_கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்டதீ விபத்தில் 94 குழந்தைகள் மிகவும் பரிதாபமான நிலையில் இறந்துவிட்டனர். எனவே ஆண்டுதோறும் இதே நாளில் கும்பகோணத்தில் துக்கதினம் நடத்தப்படுகிறது. அந்நாளில் அங்கு யாரும் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது கிடையாது.

கும்பகோணத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் அனைவரும் சுபநிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பது போன்று, ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயமும் மேற்கண்ட 34 நாட்களிலும் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்கின்ற காரணத்தினால், இந்த நாட்களில் ஒட்டு மொத்தத் தமிழருக்கும் தீமை விளைந்துள்ளது எனப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

இந்நாட்களில் தமிழர்கள் அனைவரும் வருந்தும்படியான மாபெரும் #தீவிபத்தோ (எரி #நட்சத்திரம் விழுந்த நாட்களாகவோ? ) அல்லது பிரளயம் நடந்து கடலால் #குமரிக்கண்டம் அழிந்தது போன்ற தீய பேரிடர் நிகழ்ச்சியோ நடந்து இருந்திடலாம் எனக் கருத வேண்டியுள்ளது.

விளக்குச்சட்டி விளக்கு எடுத்தல்

காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ #நாட்டுக்கோட்டை #நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர். அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, #நாட்டுக்கோட்டைச்_செட்டியார்கள் “விளக்குச் சட்டி – விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் #முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள் படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. அதாவது அவர்கள் #பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் #கடல்கோள் (#சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.